திமுகவுக்கு ஷாக் கொடுத்த சீமான்..! கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவிப்பு..!!
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தாம் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு திமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, நவ-18

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ சிதம்பரம் பிள்ளையின் 84 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பாஜகவினர் நடத்தும் வேலை யாத்திரை மூலமாக நாம் தமிழர் கட்சிக்கே அதிக விளம்பரம் கிடைத்துள்ளது, பாஜகவுக்கு அல்ல என்றார். கடந்த 10 ஆண்டுகளாக தான் பேசி வரும் கொள்கைகளையே தற்போது பாஜக கையில் எடுத்திருப்பதாக கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நாம்தமிழர்கட்சி தயாராகி வருவதாக கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர், எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறீர்கள் என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர், தானும் அதையே நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட போவதாக கூறியுள்ளது திமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.