சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.. அமைச்சர் S.P.வேலுமணி பேட்டி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை, நவ-18

சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஊரக தொழிற்துறை அமைச்சர் பெஞ்சமின், அரசு செயலாளர்கள் ஹன்ஸ் ராஜ் வர்மா, அதுல்ய மிஷ்ரா, சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், சென்னை நகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘12 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டி பெய்துள்ளது. வரலாறு காணாத கனமழை பெய்தாலும் சில மணி நேரங்களில் வடிந்து விடும் அளவிற்கு வடிகால் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கத்தில் கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரிப்பால்தான் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. வீராணம் உட்பட சென்னைக்கான குடிநீர் தரும் நீர்நிலைளில் 8 டி.எம்.சிதான் நீர் உள்ளது. இன்னும் 4 டி.எம்.சி நீர் வரவேண்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவதால் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. 100% சென்னைக்கு பாதிப்பு வராது என்று தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி வாராந்திர தரவரிசையில் சென்னை குறைந்துள்ளது குறித்த கேள்விக்கு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பதிலளித்தார். மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத மருத்துவமனைகள் மீது 17 லட்ச ரூபாய் வரை அபராதம் விதித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *