மழைநீர் சேகரிக்காத 9 ஆயிரம் வீடுகளுக்கு மாநகராட்சி நோட்டீசு

சென்னை செப்டம்பர் 2

சென்னையில் மழைநீர் சேகரிக்காத 9 ஆயிரம் வீடுகளுக்கு மாநகராட்சி நோட்டீசு அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் உத்தரவின் பேரில் இந்த பணியை அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வுசெய்து வருகிறார்கள். பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள், தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு மையம் செயல்படுகிறதா? என ஒவ்வொரு மண்டலமாக தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

மழைநீரை சேமிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்காத வீடுகள், கட்டிட உரிமையாளர்கள், நிறுவனங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் வரை 2 லட்சத்து 72 ஆயிரம் வீடுகள் ஆய்வு செய்யப்பட்டது.இதில் 1 லட்சத்து 62 ஆயிரம் வீடுகளில் முறையான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. 38,507 வீடுகளில் உள்ள சேகரிப்பு மையங்கள் பழதடைந்த நிலையில் இருக்கின்றன. ஆனால் 69,490 இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பே உருவாக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அந்த கட்டிட, வீட்டு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையில் இதுவரையில் நடத்திய ஆய்வில் 9 ஆயிரம் வீடுகளில் மட்டும் மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. அந்தந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு மழைநீர் சேகரிப்பு மையத்தை உடனே அமைக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் இதனை அமைக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.

அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க இருப்பதால் அதற்குள்ளாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு மையத்தை உருவாக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *