ரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்தினார் சசிகலா.. வரவேற்க தயாராகும் ஆதரவாளர்கள்..!!

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தனது அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.

பெங்களூரு, நவ-18

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதியில் இருந்து அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார். அவரது தண்டனை காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் சசிகலா விடுதலை குறித்து செய்திகள் வெளியாகி வந்தன.

இதற்கிடையே, பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி என்பவர், சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு கடிதம் மூலம் பதிலளித்த பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டு ஆர்.லதா, “சிறை ஆவணங்கள்படி சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள அபராதத் தொகையை செலுத்தினால், சசிகலா அனேகமாக அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலை ஆகலாம்.
அபராதத் தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் 13 மாதங்கள் அதாவது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், அவர் பரோல் காலத்தை பயன்படுத்தினால், அவர் விடுதலை செய்யப்படும் தேதியில் மாற்றம் ஏற்படலாம்” என்று கூறி இருந்தார்.

வழக்கமான நடைமுறைகளின்படி, அபராதத் தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்து இருந்தார். ஏற்கனவே, தனது அபராதத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் சுதாகரன் செலுத்தி உள்ளார்.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவப்பா முன் ரூ.10.10 கோடிக்கான காசோலையை சசிகலா வழக்கறிஞர் வழங்கினார்.

சசிகலா விடுதலையானதும் பெங்களூரில் இருந்து சென்னை வரை பிரமாண்ட வரவேற்பு அளிக்க சசிகலா தரப்பு ஆலோசனை நடத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான கார்களில் பெங்களூரு சென்று சசிகலாவை வரவேற்கவும் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *