அரியர் தேர்வுகளை நடத்தியே ஆக வேண்டும்.. யுஜிசியின் திட்டவட்ட அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி..!!

அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சென்னை, நவ-18

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்குகளில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், அரியர் தேர்வுகளை ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது.

பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில், இறுதிப் பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும், இறுதிப் பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரியர் தேர்வுகள் ரத்து விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் பதில் மனுவில், தமிழக அரசின் ரத்து அறிவிப்பு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது சில பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தான் இன்று நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவ்வழக்கு தொடர்பாக கூடுதல் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்ததாக குறிப்பிட்டார். அந்த பதில் மனுவில்,அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது. அரியர் தேர்வை ரத்து செய்வது விதிகளுக்கு முரணானது, கல்லூரி மாணவர்களுக்கு இறுதிப்பருவத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும், முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் இறுதிப்பருவ மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க முடியாது,’ என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு அவகாசம் வழங்கி வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *