காங்கிரசில் மட்டுமா குடும்ப அரசியல்? திமுகவில் இல்லையா?.. ஸ்டாலினை வம்பிழுத்த கார்த்தி சிதம்பரம்
புதுக்கோட்டை, நவ-17

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதாவது ;-
“தமிழகத்தில் அரசியல் சூழல் குறித்து ‘ஐபேக்’ எனும் நிறுவனத்தை வைத்து திமுக சர்வே செய்ததைப் போன்று காங்கிரஸ் கட்சியும் ஒரு நிறுவனத்தை வைத்து 234 தொகுதிகளிலும் சர்வே செய்துள்ளது.
அதன்படி, தொகுதிப் பங்கீடு குறித்து திமுக அழைக்கும்போது எங்களுக்குச் சாதகமான தொகுதிகளின் கள நிலவரம், வாக்கு வங்கி, வேட்பாளர்களாகப் பரிந்துரை செய்யப்படுவோரின் பலம் போன்ற விவரங்களோடு சென்று பேசுவோமே தவிர, பொத்தாம் பொதுவாக எண்ணிக்கையை மட்டுமே முன்னிறுத்தமாட்டோம்.
ஒவ்வொரு மாநிலத்தின் அரசியல் சூழல் வெவ்வேறாகவே இருக்கும். எனவே, பிஹார் தேர்தல் முடிவோடு தமிழகத் தேர்தலை ஒப்பிட்டுப் பேசுவது தவறு.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனியாகத் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், 2019-ல் நடைபெற்ற தேர்தலில் 2 கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது 38 இடங்களில் வெற்றி பெற்றன. இது, கூட்டணிக் கட்சிகளால் சாதித்தவையாகும்.
எனவே, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாகத் தேர்தலைச் சந்திக்கும்போது கிடைப்பதைவிட, கூட்டணியோடு தேர்தலைச் சந்திக்கும்போது கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அனைத்து நிலையிலான அதிகாரத்தையும் ஒரே இடத்தில் குவிக்காமல், அந்தந்த மாநிலத்தின் தலைமைக்கும், மாவட்டங்களின் தலைமைக்கும் வழங்க வேண்டும் என்பது எனது கருத்து.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெளி மாநிலத்தவரைத் துணைவேந்தராக நியமித்ததையே ஏற்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான தேசியத் தலைவர் சோனியா காந்திதான்.
இந்தியாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளில் குடும்ப அரசியல்தான் நடக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் மட்டுமே குடும்ப அரசியல் இருப்பதாக கேள்வி எழுப்புவது தவறு. குடும்ப அரசியல் குறித்து காங்கிரசிடம் மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் குடும்ப அரசியல் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? பல மாநிலங்களில் முக்கிய தலைவர்களின் வாரிசுகளே அடுத்தடுத்து பதவிகளுக்கு வருகின்றனர்.
பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தேர்தல் சூழலை கணிக்க முடியாது. பீகார் நிலவரம் வேறு, தமிழக நிலவரம் வேறு; திமுகவை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்துவோம்
மத்திய உள்துறை அமைச்சர் எந்த ஊருக்கு வேண்டுமானும் செல்லலாம். தமிழகத்துக்கு வருவதைப் பெரிதாக பொருட்படுத்தத் தேவையில்லை. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுவதைப் போன்று யாரும் அஞ்சவும் தேவையில்லை. எதிர்க்கட்சிகள் அஞ்சுவதற்கு அமித்ஷா ஒன்றும் சர்வாதிகாரி அல்ல”.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.