‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணனின் மறைவு தமிழ்ப் பதிப்புலகத்திற்குப் பேரிழப்பு.. முதல்வர் இரங்கல்

‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணனின் மறைவு தமிழ்ப் பதிப்புலகத்திற்குப் பேரிழப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை, நவ-17

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ. 17) வெளியிட்ட இரங்கல் செய்தி பின்வருமாறு :-

“தமிழ்ப் பதிப்புலகத்தின் முன்னணிப் பதிப்பாளரும், க்ரியா பதிப்பகத்தின் ஆசிரியருமான ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

அன்பும், எளிமையும், கடின உழைப்பும் மிகுந்த ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன், விளம்பரத் துறையில் பணியாற்றி, பின்னர் தனது 30-வது வயதில் பதிப்பகத் துறைக்கு வந்தவர். இவர் 1974-ம் ஆண்டு க்ரியா பதிப்பகத்தைத் தொடங்கினார். தனது க்ரியா பதிப்பகம் மூலம் தற்காலத் தமிழுக்கான அகராதி ஒன்றை வெளியிட்டார். இந்த அகராதி தமிழ்ப் பதிப்புலகத்தில் பெரும் சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘க்ரியா’ எஸ். ராமகிருஷ்ணன் சுற்றுச்சூழல், சுகாதாரம், தத்துவம், தொழில்நுட்பம் எனப் பல தலைப்புகளின் கீழ் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவர், பல்வேறு பிறமொழிப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட பெருமைக்குரியவர்.

‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணனின் மறைவு தமிழ்ப் பதிப்புலகத்திற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பதிப்புலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *