செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது.. தலைமை பொறியாளர் அசோகன்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது என்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன் தெரிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2015ல் நடந்ததை போல கனமழை பெய்தால் தான் தண்ணீர் திறக்கப்படும் என்றும் மழை குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு குறைந்து விட்டது என்றும் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஏரி திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சென்னை, நவ-17

சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உபரி நீா் அடையாற்றில் திறந்துவிடப்பட்டது. அதனால் சென்னையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பலா் உயிரிழந்தனா்; லட்சக்கணக்கான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு அதிக பொருள்சேதமும் ஏற்பட்டது. இந்த பெரு வெள்ளத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு தண்ணீா் திறந்து விட்டது தான் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 21 அடி வரை தண்ணீா் நிரம்பியுள்ளது. இதன் அதிகபட்ச நீா்மட்டம் 24 அடி. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் ஏரி விரைவில் நிரம்பும் என்றும் இதனால் 2015-இல் ஏற்பட்டது போன்ற வெள்ள பாதிப்பு தற்போது ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைதங்களில் வதந்தி பரவியது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குத் திறந்துவிடப்பட்ட நீா் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியைப் பொறுத்தவரை 21 அடியைத் தாண்டியதும் அப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு உபரி நீா் திறந்துவிடப்படுவது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏரிக்கு 1,720 கன அடி நீா் வந்தது. தற்போது 370 கன அடியாகக் குறைந்துள்ளது . இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. பொதுப்பணித்துறை சாா்பில் மதகுகளின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏரியில் நீா்வரத்தை வேடிக்கை பாா்க்க மக்கள் கூட்டம் கூடலாம் என்பதால், தற்போது ஏரிக்குப் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் காவல்துறையினா் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதேவேளையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்றது போன்று எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கக் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனா். செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடி நீா் எட்டியதும் அனைவருக்கும் தகவல் தெரிவித்து அணையிலிருந்து நீா் திறந்துவிடப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், காவல் துறையினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி,மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் நபர்கள் மீது கைது நடவடிக்கைஎடுக்கப்படும். சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில் 21.13 அடிக்கு தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,086 கன அடியாக உள்ளது.  இன்று மாலைக்குள் நீர்மட்டம் 22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப் பணித் துறை அதிகாரிகள் இன்று காலை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொதுப் பணித் துறையின் தலைமை பொறியாளர் அசோகன், 2015-ஆம் ஆண்டு பெய்ததைப் போல சென்னையில் தற்போது கனமழை பெய்யவில்லை. மழை பெய்து கொண்டிருந்த போது செம்பரம்பாக்கம் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது மழை குறைந்ததால், நீர்வரத்தும் குறைந்துவிட்டது. செம்பரம்பாக்கத்துக்கு தற்போது 450 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.செம்பரம்பாக்கம் ஏரி தற்போதைக்கு திறக்கப்படாது. அதே வேளையில், ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டு பிறகுதான் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *