“கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி”.. நமது அம்மா நாளிதழ் நெத்தியடி..!!
சாதியாலும் மதத்தாலும் மக்களை பிளவுப்படுத்துகிற உள் நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகம் ஆமோதிக்காது, ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று நமது அம்மா நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதங்களின் பெயரால் வாங்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதிக்காது என்றும் நமது அம்மாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவ-16

தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டிருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி மறுத்தது. இருப்பினும் பாஜகவினர் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தினர். இதனால் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்ட பலரும் கைதாகி விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் நாளை ( 17 ஆம் தேதி) மீண்டும் வேல் யாத்திரை நடக்கும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜகவின் வானதி சீனிவாசன், வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர் விளைவுகளை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து அதிமுகவின் நமது அம்மா நாளிதழில், ‘
மனிதத்தை நெறிப்படுத்தவே மதங்களின்றி, வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இந்திய தேசத்திற்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ் நாட்டு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். ஓம், ஓம் என்று ஒலிக்கும் இந்த மந்திரத்தின் பொருள் அமைதி, நிறைவுகொள் என்பதாகும். அதுபோலவே ஆமென் என்கிற கிறிஸ்துவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அமைதிகொள், சாந்தமடை என்பதாகும். அதுபோலவே இஸ்லாம் என்கிற வார்த்தையும், அமைதி, சமத்துவம் என்பதையே உணர்த்துகிறது.இப்படி மதங்கள் அனைத்தும் போதிப்பது மானுட சமூகத்தின் அமைதியையும் அன்பையும் சாத்வீகத்தையும்தான்.
மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை அதிமுக அனுமதிக்காது. சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக அனுமதிக்காது என்பதை யாத்திரை செல்வோர் உணரவேண்டும். சாதி மதத்தால் மக்களை பிளவுபடுத்தும் உள்நோக்கம் கொண்ட யாத்திரை ஊர்வலங்களை தமிழகம் ஆதரிக்காது. அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமை ஒருமைப்பாட்டை உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டம் ஆனாலும் சரி காவி கொடி பிடிப்பவர்கள் ஆனாலும் சரி” என்று குறிப்பிட்டுள்ளது.