தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. பழைய கட்டிடங்களில் தங்க வேண்டாம் என எச்சரிக்கை
சென்னை, நவ-16

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூரிலும் பலத்த மழை பெய்யும் என கூறியுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கரூர், கோவை, திருச்சியில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. அதே போல் 17 ஆம் தேதியும் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கனமழை தொடர்வதால் பழைய கட்டிடங்களில் தங்க வேண்டாம் என தமிழக மக்களுக்கு பேரிடர் மீட்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பழைய கட்டிடங்களில் தங்குவதையோ அருகில் செல்வதையோ தவிர்க்கவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டிடங்களில் தங்கி இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மீட்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அதுபோலவே, பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ மற்றும் கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.