தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மொத்தம் 6.10 கோடி வாக்காளர்கள் உள்ளனர்..!

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று வெளியிட்டார்.

சென்னை, நவ-16

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று வெளியிட்டார். மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களுடைய பெயர் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 6.10 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு வெளியிட்டார். அதில், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6,10,44,358 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3,01,12,370 ஆக இருக்கிறது.பெண் வாக்காளர்கள் 3.01 கோடியாக உள்ளனர்.

பெயர் சேர்க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். அந்த விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி அதிகாரியிடம் அனைத்து வேலை நாட்களிலும் கொடுக்கலாம்.

வருகிற 21, 22-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் உள்ள வாக்குச்சாவடி அதிகாரியிடமும் விண்ணப்பங்களை வழங்கலாம். இவ்வாறு கொடுக்கப்படும் விண்ணப்பத்துடன் வயது, முகவரி ஆகியவற்றை உறுதி செய்யும் சான்றிதழ்களும் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.

இவ்வாறு பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஜனவரி மாதம் 5-ந்தேதியன்று இறுதி செய்யப்பட உள்ளது. இதனைதொடர்ந்து ஜனவரி 15-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *