எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு.. நவ.18-ல் கலந்தாய்வு தொடங்கும் என அறிவிப்பு

சென்னை, நவ-16

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவ கல்லூரிகளில் 4,981 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,760 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியதை அடுத்து மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடவடிக்கைகள் தொடங்கின.
அதன்படி, இணையதள முகவரிகளில் மாணவா்கள் விண்ணப்பங்களை கடந்த வியாழக்கிழமை (நவ.12) வரை சமா்ப்பித்தனா். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமாா் 25,000 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,000 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பங்களைப் பரிசீலனைக்குட்படுத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் இன்று வெளியிட்டார். இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி, 7.5% இட ஒதுக்கீட்டில் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது.

710 மதிப்பெண்களுடன் திருப்பூரைச் சேர்ந்த ஸ்ரீஜன் முதலிடம் பிடித்துள்ளார். 705 மதிப்பெண்களுடன் நாமக்கல் மாணவி மோகன்பிரபா இரண்டாம் பெற்றுள்ளார். சென்னையை சேர்ந்த சுவேதா 701 மதிப்பெண்களுடன் 3-ம் இடம் பிடித்துள்ளார்.

7.5% உள்ஒதுக்கீடு தரவரிசையில் 664 மதிப்பெண்கள் பெற்று தேனியைச் சேர்ந்த ஜீவித்குமார் முதலிடம் பெற்றுள்ளார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவர் அன்பரசன் 646 மதிப்பெண்களுடன் 2-ம் இடம் பிடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த மாணவி திவ்யதர்ஷினி 3-ம் இடமும், வேலூரைச் சேர்ந்த குணசேகரன் 4-ம் இடமும் (4-ம் இடம் பிடித்தவர் ஆதி திராவிடர் பள்ளியில் பயின்றவர்), ஈரோட்டைச் சேர்ந்த பூபதி 5-வது இடமும் பெற்றுள்ளனர்.

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் (18-11-2020) தொடங்கும் என அமைச்சர் விஜயபாஸ்கள் கூறினார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு தொடங்கும் என கூறினார். முறைகேடுகளை தடுக்கவே ஆன்லைன் கலந்தாய்வு இல்லை என தெரிவித்தார்.

முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கும், அடுத்த நாள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மூன்றாவது நாளில் இருந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *