மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம்

மண்டல – மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில், கோயிலில் பக்தா்கள் வழிபட இன்று (நவம்பர் 16) முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

கேரளா, நவ-16

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி நடை திறப்பட்டு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதையொட்டி கேரளாவில் இருந்து மட்டுமின்றி தமிழகம் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடி கட்டி வருவது வழக்கம்.

இந்த ஆண்டு மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதியும், மகர விளக்கு பூஜை 2021 ஜனவரி 14-ந் தேதியும் நடக்கிறது. இதற்காக நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு, புதிய மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தினசரி வழக்கமான அனைத்து பூஜைகளுடன் வழிபாடுகள் நடைபெற்றது. தினசரி பூஜை இடைவேளைக்காக மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பின்னர் இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்கனவே ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்து கொள்ள வேண்டும். தினசரி 1000 பக்தர்களும், சனி, ஞாயிறு நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல, மகர விளக்கு நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். 10 வயது முதல் 60 வயது வரையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தனி மனித இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். இது மட்டுமின்றி சானிடைசர் வைத்திருக்க வேண்டும்.

கோயில் வளாகத்தில் பக்தா்கள் தங்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள். திருவனந்தபுரம், திருவல்லா, செங்கன்னூா் மற்றும் கோட்டயத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பக்தா்களிடம் கொரோனா பரிசோதனை செய்வதற்கு மாநில சுகாதாரத் துறை ஏற்பாடுகள் செய்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *