கடந்த 2 நாளில் தமிழகத்தில் 466 கோடிக்கு மது விற்பனை.. முதலிடத்தை பிடித்த மதுரை..!!
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாளில் மட்டும் தமிழகத்தில் 466 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 110 கோடி அதிகமாகும். மதுரை மண்டலம் மது விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை, நவ-16

தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. கொரோனா ஊரடங்கில் அரசு அறிவித்த பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில் 4,800 டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் சாதாரண நாட்களில் 80 முதல் 100 கோடி வரையிலும், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விழா நாட்களில் ₹150 கோடி வரையிலும் மது விற்பனை நடக்கும். அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
சென்னையில் இருந்து அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதன் காரணமாகவே தீபாவளி அன்று சென்னையை விட மற்ற மாவட்டங்களிலேயே மதுபான விற்பனை அதிகமாக நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் மட்டும் 465.79 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதன்படி, தீபாவளிக்கு முந்தைய தினமான 13ம் தேதி சென்னை மண்டலத்தில் 44.25 கோடி, திருச்சி மண்டலத்தில் 47.37 கோடி, சேலம் மண்டலத்தில் 43.26 கோடி, மதுரை மண்டலத்தில் 51.25 கோடி, கோவை மண்டலத்தில் 41.75 கோடிக்கும் என மொத்தம் 227.88 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதைத்தொடந்து, தீபாவளி தினமான 14ம் தேதி சென்னை மண்டலத்தில் 50.11 கோடி, திருச்சி மண்டலத்தில் 48.10 கோடி, சேலம் மண்டலத்தில் 44.32 கோடி, மதுரை மண்டலத்தில் 52.57 கோடி, கோவை மண்டலத்தில் 42.81 கோடிக்கும் என மொத்தம் 237.91 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 2 நாட்களில் மட்டும் 103.82 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளில் 172 கோடிக்கும், தீபாவளி அன்று 183 கோடிக்கும் என மொத்தம் 355 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தை கூட பொருட்படுத்தாமல் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் திரண்டனர். இதனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.103.82 கோடி அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.