பீகாரில் 4ஆவது முறையாக முதல்வராக இன்று பொறுப்பேற்கிறார் நிதிஷ்குமார்..பாஜவுக்கு 2 துணை முதல்வர் பதவி?..!
பீகார் மாநிலத்தின் முதல்வராக, தொடர்ந்து 4வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் இன்று மாலை பதவியேற்கிறார்.
பாட்னா, நவ-16

பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 125 இடங்களை கைப்பற்றியது. பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், பாட்னாவில் உள்ள நிதிஷ் குமார் இல்லத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில், நிதிஷ் குமார், பாஜகவின் மேலிட பார்வையாளராக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், இக்கூட்டணியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம், தொடர்ந்து 4வது முறையாக இம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்கும் வாய்ப்பை அவர் பெற்றார். இதைத் தொடர்ந்து, ராஜ்பவன் சென்று ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ் குமார் சந்தித்தார். அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 4 கட்சிகளின் எம்எல்ஏ.க்களும் தனக்கு ஆதரவு அளிப்பதற்கான கடிதங்களை சமர்ப்பித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அவரை ஆட்சி அமைக்கும்படி அழைத்தார்.
ராஜ்பவனில் இருந்து வீடு திரும்பிய பிறகு தனது வீட்டுக்கு வெளியே நிதிஷ் அளித்த பேட்டியில், “திங்களன்று (இன்று) மாலை 4 – 4.30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு விழா நடைபெறும். பிறகு, சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவது பற்றி முடிவு எடுக்கப்படும்,” என்றார். பதவியேற்பு விழாவில், நிதிஷ் குமாருடன் பாஜகவை சேர்ந்த 2 பேர் துணை முதல்வராக பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட்டுள்ளன, யாரெல்லாம் பதவியேற்பார்கள் என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.