தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சென்னை, நவ-16

தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மற்றும் பெயர்களை சேர்க்க, நீக்கம் செய்யும் பணிகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். இதைத்தொடர்ந்து நவம்பர் 16ம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 15ம் தேதி வரை ஒரு மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக நவம்பர் 21 மற்றும் 22ம் தேதி (சனி. ஞாயிறு), டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாமும் நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த பணிகள் நடைபெறும். அதன்படி 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிரம்பியவர்களும், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். அதேபோன்று வாக்காளர் அட்டையில் உள்ள திருத்தம், முகவரி மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகளை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும், வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வியாழக்கிழமை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறும்போது, “வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு பெயர்கள் நீக்கப்படுவது இல்லை. நீக்கப்பட்டவர்களின் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று முதல் வைக்கப்பட்டு இருக்கும். அரசியல் கட்சியினர் அதை பார்க்கலாம். மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட உள்ளனர். தமிழகம் முழுவதும் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறித்து இன்று காலை 11.30 மணிக்கு தலைமை செயலகத்தில் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும். பின்னர் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் 20ம் தேதி வெளியிடப்படும் என்றார்.

பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது, ஜனவரி 5-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு, ஜனவரி 20-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் 2021 ஜனவரி 1ல் 18 வயது பூர்த்தியாவோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *