அண்ணா பல்கலை., துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் பற்றி விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு..!

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, நவ-13

அண்ணா பல்கலைக்கழகம் உயர் சிறப்பு அந்தஸ்தை அடைவது குறித்து மத்திய அரசுக்குத் தன்னிச்சையாக துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. இதனை, தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. தன்னிச்சையாகக் கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இந்நிலையில் சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது குறித்துப் பல்வேறு புகார்கள் தமிழக அரசுக்கு வந்தன. இதையடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உயர் கல்வித்துறை சார்பில் இதற்கான ஆணை கடந்த நவ.11 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணையில் மேற்குறிப்பிட்ட விவரங்கள், புகார்கள், புகார் அளித்தவர்கள் குறித்து விரிவாகப் பதிவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட புகார்கள் குறித்து ஒரு நபர் விசாரணைக் குழு விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு தரும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *