தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்..! களை கட்டியது தீபாவளி..!!
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஜவுளி மற்றும் பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை, நவ-13

தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், கடந்த 2 நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதேபோல், சென்னையில் இருந்து 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். மேலும், தீபாவளி என்றாலே புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை தான் அதிகமாக இருக்கும். கொரோனா பரவல் இருந்தாலும் கடந்த 2 தினங்களாக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. காலை நேரத்தை விட மாலை நேரங்களில்தான் புத்தாடை மற்றும் பட்டாசு, இனிப்பு வகைகளை வாங்க அதிகளவில் மக்கள் குவிந்து வருகின்றனர். மழை கொட்டினாலும், அதை பொருட்படுத்தாமல் மக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர். அந்தவகையில் இன்று காலையில் தி.நகர், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
இதேபோல், பூ, பழ வகைகள், காய்கறிகளை வாங்குவதற்கு கோயம்பேடு, மாதவரம், வானகரம் உள்ளிட்ட மார்க்கெட் பகுதிக்கு காலை முதலே மக்கள் அதிகளவில் வந்தவாறு இருந்தனர். தீவுத்திடலிலும் இன்று காலை முதலே பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்து அவர்களுக்கு விருப்பமான பட்டாசுகளை வாங்கி கொடுத்தனர். இன்று விடுமுறை நாள் என்பதால் தி.நகரில் புத்தாடை வாங்க இன்று காலை முதலே அதிகளவில் மக்கள் திரண்டனர். இதனால், திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவளங்களை தடுக்க வழக்கத்தைவிட அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நெரிசல் மிகுந்த பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதேபோல், போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என எச்சரிக்கை செய்தனர்.
கடந்த இரு நாட்களாக தீபாவளிக்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். சுமார் 3.5 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதனால் மாலை நேரங்களில் புறநகர் பகுதிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. ஒருபக்கம் தீபாவளி விற்பனை சூடுபிடிப்பது போல் மறுபக்கம் டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை சூடுபிடித்து வருகிறது.