ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்…! இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம்
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்த நிலையில், 3 பொதுமக்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜம்மு, நவ-13

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ உதவி செய்து வருகின்றனர். சில நேரங்களில் எல்லை அருகில் உள்ள கிராம மக்களை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவத்தினர் மோர்ட்டார் குண்டுகளை வீசுவதும் உண்டு. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த துணை ஆய்வாளர் ராகேஷ் தோவல் உயிரிழந்தார். அதேபோல் மேலும், இரு வீரர்களும் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.