3-வது முறையாக ஆச்சரியமூட்டிய மேட்டூர் அணை…
மேட்டூர், அக்டோபர்-23
மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 350 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 27 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
நடப்பாண்டில் 2 மாதங்களில் 3-வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. அதுபோன்று மேட்டூர் அணை வரலாற்றில் 86 ஆண்டுகளில் 44-வது முறையாக நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர் இருப்பு 92.40 டி.எம்.சி.யாக உள்ளது. எனவே அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படும். இதனால், மேட்டூர் அணைக்கு கீழ் உள்ள 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.