சென்னையில் கணவர், மாமனார், மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகள் கைது..!

சென்னை சவுகார்பேட்டையில் கணவர் மற்றும் மாமனார், மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகளை காவல்துறையினர் புனேவில் கைது செய்தனர். கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மருமகள் ஜெயமாலா உள்பட மூன்று பேரை புணேவில் சுற்றுவளைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை, நவ-13

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தலில் சந்த் (வயது 74). சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். வால்டாக்ஸ் சாலை விநாயகர் மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (38) ஆகியோருடன் வசித்துவந்தார். இவருடைய மகள் பிங்கி (35) திருமணமாகி பேசின்பிரிட்ஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் மாலை தலில் சந்த், புஷ்பா பாய், ஷீத்தல் ஆகியோர் துப்பாக்கி குண்டு பாய்ந்தநிலையில் ரத்தவெள்ளத்தில் படுக்கை அறையில் பிணமாக கிடந்தனர்.

தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் மூவரது உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரது மருமகளே மூவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. சீத்தலிடம், விவாகரத்து பெற்று வாழ்ந்து வரும் ஜெயமாலா ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும், அது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவி வந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே பேச்சுவார்த்தைகாக நேற்று முன் தினம் மகாராஷ்டிரத்திலிருந்து ஜெயமாலா தமது உறவினர்களுடன் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தலில் சந்த், புஷ்பா பாய், ஷீத்தல் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மருமகள் ஜெயமாலா உள்பட 3 பேரை புனேவில் சென்னை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *