சென்னை உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரி சோதனை.. 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு
சென்னை, நவ-12

சென்னை செளகாா்பேட்டை என்எஸ்சி போஸ் சாலையில் பிரபலமான நகைக் கடை உள்ளது. பல மாநிலங்களிலும் இங்கிருந்து நகை மொத்த வியாபாரம் செய்யப்படுகிறது. இந்தக் கடையில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்படுவதாகவும், தரமற்ற தங்க நகைகள் விற்கப்படுவதாகவும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வியாபார தொடா்பில் இருந்த மதுரை, திருநெல்வேலி, கடையநல்லூா், தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ள சிறு நகைக் கடைகள், கொல்கத்தா, கேரளா, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகள், வியாபாரிகளின் வீடுகள் உள்பட 32 இடங்களில் கடந்த 10-ம் தேதி சோதனை நடைபெற்றது.
இந்தச் சோதனையில் வரி ஏய்ப்பு தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். சோதனை பல இடங்களில் இரவையும் தாண்டி நீடித்தது. கணக்கில் வராத பணம், நகை, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சென்னை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி, மதுரை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 32 இடங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில், கணக்கில் வராத 400 கோடி மதிப்பிலான 814 கிலோ நகை இருப்பில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அது வரி அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், வருமானத்தை குறைத்துக் காட்டும் வகையில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில், தனியார் நிறுவனம், கணக்கில் வராத ரூ.500 கோடி அளவுக்கு வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வருமான வரித்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.