எத்தனை தடைகள் வந்தாலும் திட்டமிட்டப்படி வேல் யாத்திரை தொடரும்.. எல்.முருகன் பேட்டி
எத்தனை தடைகள் வந்தாலும் திட்டமிட்டப்படி வேல் யாத்திரை தொடரும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை, நவ-12

சென்னை தியாகராய நகர் கமலாலயத்தில் இன்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது ;-
‘நாங்கள் திட்டமிட்டபடி வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகை காரணமாக நேற்று முதல் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகிற 17 ஆம் தேதி முதல் யாத்திரை மீண்டும் தொடங்கி வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி திட்டமிட்டபடி திருச்செந்தூரில் முடிவடையும். மேலும், வேல் யாத்திரையில் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். வருகிற 22 ஆம் தேதி அமைச்சர் சதானந்த கவுடா கோவையில் கலந்துகொள்கிறார். 23 ஆம் தேதி முரளிதரன், 24 ஆம் தேதி கர்நாடக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அஸ்வினி, டிசம்பர் 2 ஆம் தேதி இளைஞரணிச் செயலாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரும், இறுதி நாளான டிசம்பர் 6 ஆம் தேதி கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும் கலந்துகொள்ள இருக்கின்றனர். இறுதி நாள் நிகழ்ச்சியில் ஜே.பி. நட்டா கலந்துகொள்வது ஓரிரு நாளில் உறுதி செய்யப்படும்.
கொரோனா முன்களப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. வேல் யாத்திரையின் போது நடந்த சில சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது. சாலையில் செல்பவர்களை கூட காவல்துறையினர் கைது செய்கிறார்கள். பாஜக தலைவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கிறார்கள். சாலை, கோயில், வீட்டில் இருப்பவர்களை எல்லாம் அரசு முன்னெச்சரிக்கையாக கைது செய்வதை ஏற்க முடியாது.
பாஜக கூடினால் மட்டும் வழக்கு, கைது நடவடிக்கை பாய்கிறது. தமிழக அரசு ஏன் வேல் யாத்திரையை தடுக்கிறது என்று தெரியவில்லை. பாஜக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக கே.டி.ராகவன் சொன்னது சரிதான். அதிமுக உடனான கூட்டணி வேறு, கொள்கைகள் வேறு: தேர்தல் வரக்கூடிய தமிழகத்தில் கூட்டம் நடத்தாமல் எப்படி இருக்க முடியும்?
எனினும், எவ்வளவு தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.