11 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி.. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்து அபாரம்..!

மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் காலியாக இருந்த 28 பேரவைத் தொகுதிகள், குஜராத்தில் காலியாக இருந்த 8 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் காலியாக இருந்த 7 தொகுதிகளுக்குக் கடந்த 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

நாகாலாந்து, ஜாா்க்கண்ட், ஒடிசா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் காலியாக இருந்த தலா இரு பேரவைத் தொகுதிகளுக்கும், தெலங்கானா, ஹரியாணா, சத்தீஸ்காில் காலியாக இருந்த தலா 1 இடங்களுக்கும் கடந்த 3-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.
மணிப்பூா் சட்டப் பேரவையில் காலியாக இருந்த 5 இடங்களுக்கு கடந்த 7-ஆம் தேதி இடைத்தோதல் நடைபெற்றது.

இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. அனைத்து மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மத்தியப் பிரதேசம் தவிர மற்ற 10 மாநிலங்களில் மொத்தம் 31 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 7 தொகுதிகளிலும் வென்றுள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடந்த 28 தொகுதிகளில் 19 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. காங்கிரஸ் 9 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த தேர்தலில் பாஜக 49.5 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 40.5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *