பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி.. மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார்..!!

பாட்னா, நவ-11

நாடு முழுவதும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய பீகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அங்கு மீண்டும் நிதீஷ் குமாா் தலைமையில் ஆட்சி அமையவுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வென்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. மகா கூட்டணி 110 இடங்களிலும், பிற கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக 74 தொகுதிகளிலும், ஜேடியூ 43 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இக்கூட்டணியில் உள்ள ஹிந்துஸ்தானி அவாமி மோா்ச்சா (எஸ்), விகாஸ்ஷீல் இன்சான் கட்சி ஆகியவை தலா 4 தொகுதிகளில் வென்றுள்ளன. இதன் மூலம் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான கூட்டணிக்கு 125 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது.

மகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) 75 தொகுதிகளும், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இது தவிர கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

பீகாரில் தொடா்ந்து 15 ஆண்டுகளாக நிதீஷ் குமாா் முதல்வராக இருப்பதால் ஆட்சிக்கு எதிரான மனப்போக்கு உள்ளிட்டவை ஆளும் கூட்டணிக்கு எதிராக இருக்கும் என்றே கருதப்பட்டது. பல்வேறு கணிப்புகளும் ஆளும் கூட்டணிக்கு வெற்றி கிடைக்காது என்றே கூறியிருந்தன. எனினும், இவை அனைத்தையும் முறியடித்து முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவைவிட நிதீஷ் குமாரின் ஜேடியூ குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், நிதீஷ் குமாா்தான் முதல்வா் என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *