பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயார்…
சென்னை, அக்டோபர்-23
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முழுவீச்சில் தயாராக உள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை பொழிவு இருக்கும்.
மேலும் கடலோர மாவட்டங்களுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 8,771 கால்நடை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். கடலோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆறுகள், நீர்த்தேக்கங்கள் உள்ள இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
முதலவர் பழனிசாமி விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்கிற அடிப்படையில் நீர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தி முன்னேற்பாடுகளை செய்துள்ளார். 17,866 தடுப்பணைகள், 14,946 கசிவு நீர் குட்டைகள், 9780 செறிவூட்டும் கிணறுகளும் உருவாக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை வழங்கி உள்ளார். மேலும் மீட்பு பணிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்கிற உத்தரவையும் அவர் பிறப்பித்து உள்ளார்.
2 மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். தேவையான எச்சரிக்கையை மக்கள் கையாண்டு, தேவையில்லாத அச்சத்தை தவிர்க்க வேண்டும். இந்த மழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் கொண்டு தயார் நிலையில் தமிழக அரசு உள்ளது. காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் செல்பி எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
மின்னல்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்து உள்ளார். வடகிழக்கு பருவமழைக்கு இந்த ஆண்டு ஆயிரத்து 200 கோடி ரூபாய் கூடுதலாக முதலவர் வழங்கி இருக்கிறார். எல்லா துறைகளின் ஒத்துழைப்பு இருப்பது போல், மத்திய, மாநில அரசுகள் இந்த பருவமழை காலத்தில் ஒன்றிணைந்து செயலப்பட்டு வருகிறது. மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.