கேரளா சென்றுவரும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.. முதல்வர் வலியுறுத்தல்
கன்னியாகுமரி, நவ-10

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு நடத்தினார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதலமைச்சருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் சென்ற முதலமைச்சர் பழனிசாமி, அங்கு ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் ரூ.153.92 கோடி மதிப்பிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ரூ.54.22 கோடியில் 2,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வுசெய்தார். பின்னர் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் கூறுகையில், தமிழக அரசின் நடவடிக்கையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வேளாண் பணிகள் தடையின்றி நடைபெற்ற காரணத்தால் தமிழகத்தில் மகசூல் அதிகரித்துள்ளது. தொழில்துறைக்கு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டதால் பெரும்பாலான தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கியிள்ளன. கேரள எல்லையிலுள்ள குமரி மாவட்டத்தில் கொரோனா கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது.பணி நிமித்தம் காரணமாக கேரளா சென்றுவரும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 16 கோடி மதிப்பீட்டில் தென்னை மதிப்பு கூட்டுதல் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவியை தமிழகஅரசு வழங்கிவருகிறது. மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் துண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்