பாஜக வேல் யாத்திரை நடத்தவில்லை, அரசியல் யாத்திரை நடத்துகிறது… டிஜிபி
சென்னை, நவ-10

தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை திருத்தணியில் நவ.6 ந்தேதி தொடங்கி டிச.6 ந்தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். கொரோனாவை காரணம் காட்டி தமிழக அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வேல் யாத்திரையின்போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டதாக டி.ஜி.பி. தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக டிஜிபி தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில் என்ன விவகாரங்கள் அடங்கியுள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் விஜயநாராயணன் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். அச்சமயம், கடந்த 6,7 ஆகிய தேதிகளில் தமிழக பாஜக தரப்பில் தடையை மீறி வேல் யாத்திரை சென்றனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாஜக தலைவர் முருகன், பொன் ராதாகிருஷ்ணன், அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேல் யாத்திரையில், பாஜக மாநில தலைவர் முருகன் உட்பட கட்சியினர் யாரும் முறையாக முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை. பாஜக-வினர் வேலுடன் சென்றது கோயில் யாத்திரை அல்ல; முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையை போன்று நடத்தப்பட்டது. 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வோம் என கோர்ட்டில் பாஜக சொன்னது காகித அளவிலேயே உள்ளது. மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் எல்.முருகனின் வாகனம் சென்றதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர் என குற்றம்சாட்டப்பட்டது.