இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு தலைவர்கள் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை, நவ-10

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் முதல் வருகிற ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து தேர்வு குழுவினர் கலந்து ஆலோசித்து மாற்றங்கள் செய்து அறிவித்துள்ளனர். 20 ஓவர் அணியில் அறிமுக வீரராக இடம் பெற்று இருந்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தோள்பட்டை காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் புதுமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் நடராஜன்இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.

இதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது, இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

நடராஜனுடன் பேசினேன். அவர் உயர்வுகளைப் பெறவும், வெற்றிகள் குவித்து, அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன்!

அனைத்துக் கனவுகளும் நிறைவேறட்டும்! என பதிவிட்டுள்ளார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியிருக்கும் சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த யார்க்கர் மன்னன் திரு. நடராஜன் அவர்களுக்கு பாராட்டுகள்! கடினஉழைப்பு, விடாமுயற்சி, அசாத்திய திறமையால் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச்செய்யும் இவர் வெற்றியின் சிகரம் தொட வாழ்த்துகள்! #Yorkernatarajan என பாராட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *