அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மமா?.. மு.க.ஸ்டாலின் மீது வழக்கு.. அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம்

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடரப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

திருச்சி, நவ-10

திருச்சி விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயபாஸ்கர் கூறியதாவது ;-

மூத்த அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் எளிமையானவர். தேவையானவற்றை மட்டுமே பேசும் குணமுடையவர் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினே பேரவையில் புகழ்ந்து பேசினார். ஆனால், இப்போது, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அரசியல் ஆதாயத்துக்காக விஷமத்தனமான வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தனது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். அமைச்சர் மரணத்தில் மர்மம் எனக் கூறி யாரை குற்றம் சாட்டுகிறார். அமைச்சருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை நிர்வாகத்தையா? மருத்துவர்களையா? மருத்துவக் குழுவினரையா? என தெரியவில்லை. இதே மருத்துவமனையில்தான் திமுக தலைவர் மு. கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோரும் சிகிச்சை பெற்றனர். கரோனா தொற்று இருக்கும் நிலையில் பிற நோய்கள், இணை நோய்கள், வயது முதிர்வு ஆகியவையும் இருந்தால் இழப்பு ஏற்படுகிறது. இதேபோல்தான், அமைச்சர் துரைக்கண்ணுவுக்கும் வயது முதிர்வு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரகத் தொற்று ஆகியவை இருந்தது.

40 சவீதமாக இருந்த சிறுநீரகத் தொற்று, கரோனா பரவலுக்குப் பிறகு 90 சதவீதமாக உயர்ந்தது. மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. கூடுதலாக மாரடைப்பும் ஏற்பட்டது. இருப்பினும், உயிர்காக்கும் அனைத்து மருத்துவ உபகரணங்களை கொண்டும் அமைச்சரின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் குழு போராடியது. தமிழக அரசு சார்பிலும் சிறப்பு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. பல கட்டமாக ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்ற அமைச்சர் மரணமடைந்தார். அவரது இழப்பு குடும்பத்துக்கும், இயக்கத்துக்கும், தமிழக அமைச்சரவைக்கும் பெரிதும் இழப்பை அளித்துள்ளது.

இந்த சூழலில், அரசியல் ஆதாயம் தேட அமைச்சர் மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மருத்துவக் கல்வி இயக்குநரகமும் அமைச்சர் மரணம் குறித்து விசாரித்து அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறோம். இருப்பினும், அவதூறு கருத்துகளை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சட்டரீதியாக வழக்குத் தொடரப்படும்.

இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *