கொரோனாவில் இருந்து பாதுகாக்க மூன்றெழுத்து தடுப்பு மந்திரம் – அமைச்சர் S.P.வேலுமணி
சென்னை, நவ-10

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கவும் அmதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையிலும்,கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
தீபாவளி திருநாளையொட்டி பொது இடங்களில் மக்கள் கூடும்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமது சமூக வலைதளப்பக்கங்களில் மூன்றெழுத்தில் நம் மூச்சு இருக்கும் என்ற பெயரில் கொரோனா காலத்தில் மக்கள் எவ்வாறு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்,முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
அறம்,கைகள்,தனிமை,தூரம்,காலம்,தூய்மை,செயல் என மூன்றெழுத்து மூலம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அவர் எளிய முறையில் விளக்கிவருகிறார்.

அறம் பற்றி அவர்குறிப்பிடுகையில் ,நமக்கு நோய் தொற்று வராமல் இருக்க விழைவது மட்டுமின்றி, நம்மைச் சுற்றி இருப்போரும் நலமாக வாழ, முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிறரின் நலனிலும் அக்கறை காட்டுவதே சிறந்த அறமாகும்.

கைகள் பற்றி குறிப்பிடுகையில் கைகளை அடிக்கடி கழுவுதல், சுகாதாரமாக வைத்துக் கொள்ளுதல், கை குலுக்குவதை தவிர்த்தல், இவையாவும் நம்மைத் தொற்றிலிருந்து காத்து, நமக்கு கை கொடுக்கும் நல்ல பழக்கங்களாகும் என்றும் தனிமை பற்றி விளக்கும்போது, முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒருவேளை தொற்று ஏற்பட்டால், மருத்துவருடன் கலந்தாலோசித்து முறையாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் இந்த நோய்த்தொற்றை பெருமளவு நம்மால் பரவாமல் தடுக்க முடியும்.
என்று கூறியுள்ளார்.

தூரம் பற்றி குறிப்பிடுகையில் அவசியமாக வெளியே செல்லும்போது மட்டும் வெளியே செல்வது, அப்போதும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் தொற்று பரவாமல் இருக்க பெரிதும் உதவி செய்யும் என தெரிவித்துள்ளார்.

காலம் பற்றி அவர் தெரிவிக்கையில் அடிக்கடி கைகளை கழுவுவது, வெளியிலிருந்து வந்தவுடன் நீராவி பிடிப்பது முகக்கவசத்தை சுத்தம் செய்வது உடைகளை மாற்றுவது போன்ற சுகாதாரமான பழக்கங்களை நேரம் கடத்தாமல், உடனுக்குடனே செய்ய வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே நம்மை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.





