ஈச்சம்பாடி அணைக்கட்டு, குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவு
தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணைக்கட்டு மற்றும் திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, நவ-9

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது :-
“தருமபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடது வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, தருமபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் 13.11.2020 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 6,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்”.
இவ்வாறு முதல்வர் எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, இன்று அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், குதிரையாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், குதிரையாறு அணையிலிருந்து இடது மற்றும் வலது பிரதான கால்வாய் மற்றும் பழைய பாசனப் பரப்பு ஆகியவற்றுக்கு 11.11.2020 முதல் 10.3.2021 வரை 120 நாட்கள் பாசன காலத்திற்கு உரிய இடைவெளியில் 90 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 41 கன அடிக்கு மிகாமல் 228.10 மில்லியன் கன அடி தண்ணீரைத் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் 5,231.59 ஏக்கர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 882.27 ஏக்கர் ஆக மொத்தம் 6,113.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்” என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.