ஒரு அறைக்கு ஒரு மாணவர்.. 14 நாட்கள் கட்டாயம் தனிமை.. கல்லூரி விடுதிகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டது யூஜிசி.!!
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, கல்லூரிகள் திறக்கப்படும்போது விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைக்க வேண்டும். கல்லூரிகள் திறக்கப்பட்ட பின் வரும் விடுதி மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி, நவ-9

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில், மத்திய அரசின் 4ம் கட்ட ஊரடங்கு தளர்வு நிபந்தனைகளின்படி படிப்படியாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
இந்நிலையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
அதில், கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களை மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. குறிப்பிட்ட கல்லூரி விடுதிகளை மட்டுமே திறப்பதுடன், குறைந்த மாணவர்களை மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.‘மாணவர்கள் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். கல்லூரிகள் திறக்கப்பட்டதும் வரும் விடுதி மாணவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும். அவர்கள் கொரோனா இல்லை என சான்றிதழ் கொண்டு வந்தாலும் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும். ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்படவேண்டும்’ என யுஜிசி கூறி உள்ளது.