நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானா்ஜி பிரதமருடன் சந்திப்பு

டெல்லி.அக்டோபர்.22

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணா் அபிஜித் பானா்ஜி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணா் அபிஜித் பானா்ஜி, பிரான்ஸ் வம்சாவழி அமெரிக்கரான எஸ்தா் டஃப்லோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணா் மைக்கேல் கிரெமா் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. அபிஜித் பானா்ஜி, அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் (எம்ஐடி) பணியாற்றி வருகிறார்.  

இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில், நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய பொருளாதார நிலவரம் குறித்து அபிஜித் பானர்ஜி விவாதித்தார். இதுகுறித்த தகவலை பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். 

அதில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு, மிகச்சிறப்பாக இருந்ததாகவும், அனைவருக்கும் அதிகாரமளித்தல் என்ற அவரது பார்வை தெளிவாக இருப்பதாகவும் மோடி கூறியிருக்கிறார்.

பல்வேறு பிரிவுகளில், இருவருக்கும் இடையே, ஆரோக்கியமான மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாக குறிப்பிட்ட மோடி, அபிஜித் பானர்ஜியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்குவதாக கூறியுள்ளார். 

செய்தியாளா்களைச் சந்தித்த அபிஜித் பானா்ஜி கூறியதாவது: ஆலோசனைக்கு முன்பே, தன் மீதான எதிர் கருத்துகளை கூறுவதற்காக ஊடகங்கள் உங்களுக்கு வலைவிரிக்கின்றன என வேடிக்கையாக மோடி எச்சரித்தார். அவர் தொலைக்காட்சியில் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பதும் அவருக்கு தெரிகிறது. அதனால் அது தொடர்பாக நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
பிரதமர் தனது பொன்னான நேரத்தை எனக்காக ஒதுக்கி நிறைய விஷயங்கள் பற்றி பேசினார். இந்தியா மீது அவர் கொண்டுள்ள பார்வை தனித்துவமானது. இச்சந்திப்பு எனக்கு கிடைத்த சிறப்பு. இவ்வாறு அபிஜித் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *