தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.39,376-க்கு விற்பனை.!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை, நவ-9

தங்கம் விலை கடந்த 2 மாதத்துக்கும் மேலாக விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 7-ம் தேதி கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,884க்கும், சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,072க்கும் விற்கப்பட்டது. நேற்று 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
இந்நிலையில், இன்று வாரத்தின் முதல் தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,922க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,376க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1216 அளவுக்கு தங்கம் விலை அதிகரித்தது. தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் உயர்ந்து 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.