டெல்லி, ஒடிசாவில் நவம்பர் 30 ம் தேதி வரை பட்டாசு வெடிக்கத் தடை..தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு

இந்தியாவில் டெல்லி மற்றும் ஒடிசாவில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது.

டெல்லி, நவ-9

காற்று மாசு காரணமாக டெல்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் 7 முதல் 30 வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதன் தொடர்புடைய மனுக்களை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு கடந்த புதன்கிழமை விசாரித்தது. அப்போது பிறப்பித்த உத்தரவில், ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்கள் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடைவிதித்துள்ளன. காற்று மாசு அதிகமுள்ள நகரங்களை கொண்ட மாநிலங்களிலும், பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. காற்றின் தரம் குறைந்த மாநிலங்களில் நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து காற்று மாசு நிலவும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, அசாம், பீகார், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

பட்டாசு வெடிக்கத் தடை கோரும் விவகாரம் தொடர்பான மனுக்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தாக்கல் செய்த நிலையில், இவ்வழக்கில் நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பில் டெல்லி மற்றும் ஒடிசா மாநிலத்தில் இன்று (நவம்பர் 9) நள்ளிரவு முதல் நவம்பர் 30-ம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. காற்று மாசு மிதமான அளவு அல்லது அதற்கு குறைவாக உள்ள நகரங்களில் பசுமை பட்டாசுகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். மேலும் தீபாவளி, சாத், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளின் போது இரண்டு மணி நேரங்களுக்கு மட்டும் பட்டாசுகளை பயன்படுத்துவதற்கும், வெடிப்பதற்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும், இந்த நேர கட்டுப்பாட்டை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம் என்றும் பசுமை தீர்ப்பாயம் கூறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *