கல்லூரிகள் திறப்பு பற்றி நவம்பர் 12ந்தேதி முடிவு.. அமைச்சர் கே.பி.அன்பழகன்
நவம்பர் 16ந்தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா என்பது பற்றி 12 ந்தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். பள்ளிகளை திறப்பது பற்றி கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை, நவ-9

தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், தற்போது வரை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் வரும் நவ.16-ஆம் தேதியில் இருந்து 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா், ஆசிரியா் கழக நிா்வாகிகள், பெற்றோா், தனியாா் பள்ளிகள் நிா்வாகம் ஆகியோரின் கருத்துகளைக் கேட்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் இன்று கருத்துக் கேட்கப்படும் நிலையில் கல்லூரிகள் திறப்பு பற்றி கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக பதிலளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? என்பது பற்றி வரும் 12-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று பதிலளித்துள்ளார்.