பொருளாதார இழப்பிற்கு இதுதான் உண்மையான காரணம்…!!ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மத்திய அரசு கூறுவது போல் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார இழப்பு ஏற்படவில்லை என்று ராகுல்காந்தி எம்.பி. பேட்டியளித்துள்ளார். பொருளாதார இழப்பிற்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி தான் உண்மையான காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி, நவ-8

2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந் தேதி பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கண்டித்து, ஒவ்வொரு ஆண்டும் அந்த நாள் வரும்போதும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து, போராட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கொண்டுவந்து இன்றுடன் 4-வது ஆண்டு நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு கூறுவது போல் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார இழப்பு ஏற்படவில்லை என்றும், பொருளாதார இழப்பிற்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி தான் உண்மையான காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்களின் நலனுக்காகக் கொண்டுவரப்படவில்லை. இந்த நடவடிக்கையால் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகள் ஏற்பட்டன. எனக்கு எழுந்த கேள்வி உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்று இந்தியாவைக் கூறிய நிலையில், எவ்வாறு இந்தியப் பொருளாதாரத்தை வங்கதேசம் முந்திச் சென்றது. ஆனால், இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா வைரஸ்தான் காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கொரோனாதான் காரணமாக இருந்தால், வங்கதேசத்திலும் கொரோனா பாதிப்பு இருந்தது. உலகின் பலநாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்தது. ஆதலால், பொருளாதாரச் சீரழிவுக்கு கொரோனா வைரஸ் காரணம் அல்ல. உண்மையான காரணம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி வரியும்தான். உங்கள் சொந்தப் பணத்தை எடுக்க நீங்கள் வங்கியின் வாசலில் வரிசையில் நின்றீர்கள். மோடியின் முதலாளித்துவ நண்பர்கள் யாரும் வங்கி வாசலில் நிற்கவில்லை. நீங்கள் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தீர்கள். அந்தப் பணத்தை எடுத்து பிரதமர் மோடி தனது நண்பர்களுக்குக் கொடுத்து, ரூ.3.50 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார். தவறான ஜிஎஸ்டி வரியை மோடி அறிமுகம் செய்து, சிறு, நடுத்தர வர்த்தகத்தை அழித்து, தன்னுடைய 3 முதல் 4 முதலாளித்துவ நண்பர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இப்போது விவசாயிகள் மீது குறிவைத்துள்ள மத்திய அரசு, 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து, அவர்களின் வாழ்க்கையை முடிக்க முயல்கிறது. இந்தியாவின் பெருமையையும், பொருளாதாரத்தையும் அழித்துவிட்டார் மோடி. நாம் அனைவரும் சேர்ந்து இந்தியாவை மறுகட்டமைப்பு செய்வோம்” என்று அதில் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *