2-வது நாளாக வேல் யாத்திரை.. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கைது..!

சென்னை திருவொற்றியூரிலிருந்து கோயம்பேடு வரை வேல் யாத்திரை நடத்த முயன்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்பட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
எத்தனை தடைகள் வந்ததாலும் வேல் யாத்திரை வெற்றி பெறும் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை, நவ-8

தமிழக பாஜக சார்பில் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த முயன்ற எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரை காவல்துறையினர் நேற்று (சனிக்கிழமை) கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர். இதனிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருவொற்றியூரிலிருந்து கோயம்பேடு வரை இரண்டாவது நாளாக வேல் யாத்திரை நடத்த தமிழக பாஜகவினர் திட்டமிட்டனர்.

அதன்படி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் வேல் யாத்திரை தொடங்கினர். அப்போது போலீசார் யாத்திரையை தடுத்து நிறுத்தினர். யாத்திரையில் பங்கேற்ற எல்.முருகன், பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், சி.பி ராதாகிருஷ்ணன், பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

யாத்திரைக்கு முன்பு தொண்டர்களிடையே பேசிய எல்.முருகன், எத்தனை தடைகள் வந்ததாலும் வேல் யாத்திரை வெற்றி அடையும் என்றும், அனைத்து ஊர்களிலும் உள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று யாத்திரை நிறைவடையும் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் வரும் தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக இருக்கப்போகிறது. அடுத்து அமைய உள்ள ஆட்சியை தீர்மானிக்கப் போவது பாஜகதான் என்றும் எல்.முருகன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *