முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரசில் இணைகிறார்..!

மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து 2019’ஆம் ஆண்டில் ஐஏஎஸ் பணியில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், தற்போது தமிழக காங்கிரசில் சேரப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சென்னை, நவ-8

கர்நாடக மாநிலம் தக்ஷின் கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில். காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் 2009 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாவார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிஇ எலக்ட்ரானிக்ஸ் கல்வி பயின்ற இவர், 2009ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில், மாநில அளவில், முதல் நபராக தேர்ச்சி பெற்றவர். இவர் 2009ஆம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உதவி கலெக்டராக பணியாற்றினார்.

கர்நாடகாவில் உதவி கலெக்டர், கலெக்டர் என பலப்பொறுப்புகளில் பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றார். அவர் மாவட்ட கலெக்டராக பணியாற்றியபோது, மணல்கடத்தலை தடுத்தல், ஜாதி சண்டைகளை தடுத்தல் என பல்வேறு விவகாரங்களில் சிறப்பாக செயல்பட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை கடுமையாக விமர்சித்த சசிகாந்த் செந்தில் 2019 செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ’ஜனநாயகத்தின் அடிப்படை கட்டுமானமே முன்னெப்போதும் இல்லாத அளவில் சமரசத்திற்கு உள்ளாகும்போது நான் அரசாங்கத்தின் ஊழியராக பணியாற்றுவது நியாயமானது அல்ல’ என செந்தில் தனது ராஜினாமா கடித்தில் கூறிப்பிட்டிருந்தார்.

அதன்பின் மத்திய பாஜக அரசை தொடர்ச்சியாக விமர்சித்தும் வந்தார்.

இந்நிலையில் சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக செந்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளேன். காங்கிரஸ் வேற்றுமையை வலியுறுத்தவில்லை. ஒருங்கிணைத்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது’ என்றார்.

“நான் ஒரு வழக்கமான எம்.எல்.ஏ., எம்.பி. பதவியை நோக்கி செல்லவில்லை. ஆனால் நான் தேர்தல்களை நோக்கி செயல்படுவேன். காங்கிரஸின் மதிப்புகளை மக்களிடையே பரப்புவேன். சமுதாயமாகவோ அல்லது தனிநபர்களாகவோ அனைவரையும் அரசியல் தீர்வை நோக்கி ஒன்றிணைப்பதே எனது முக்கியமான கடமை என்பதை நான் நினைக்கிறேன். 2024’இல் நாங்கள் நிச்சயமாக ஒரு மாற்றத்தை உருவாக்குவோம் என்று நான் நம்புகிறேன்.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

நாளை டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *