தமிழ்நாட்டை பெருமைப்படுத்திய கமலா ஹாரிஸ்.. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., வாழ்த்து
சென்னை, நவ-8

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தோ்தலில் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த ஜோ பிடன் வெற்றி பெற்று அந்த நாட்டின் 46-வது அதிபராக பொறுப்பேற்கவிருக்கிறார். தமிழகத்தைப் பூா்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகப் பொறுப்பேற்கிறார். இதையடுத்து ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு எனக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அதேபோன்று, அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் கமலா ஹாரிஸ் ஆவார். இந்த வெற்றியால் அவர் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா அதிபர் தேர்தலில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அமெரிக்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ், பெண் சக்தியை நிரூபித்துள்ளார். உலகை வெல்லும் மனநிலையுடன் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணின் வலிமையை அவர் மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார். உங்கள் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.