பீகாரில் நிதிஷ் அரசுக்கு முடிவு?.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிர ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்து அமைத்துள்ள மெகா கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

பாட்னா, நவ-7

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 3-ம் தேதியும் நடைபெற்றது.

இதற்கிடையில், மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடந்து முடிந்துள்ளது. இந்த 3-ம் கட்ட தேர்தலில் 55.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் தேர்தலில் தற்போது முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது.

இந்த கூட்டணியை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இதேபோல் ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியில்( என்டிஏ) இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி சிரங் பாஸ்வான் தலைமையில் தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது.

இறுதி கட்ட தேர்தலும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பீகார் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்களும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை
வெளியிட்டு வருகின்றன. 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிர ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்து அமைத்துள்ள மெகா கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

243 பேர் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணி 120 இடங்களை கைப்பற்றும் என டைம்ஸ் நவ் – சிவோட்டர் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்.ஜே.டி காங்கிரஸ் – 120, ஜே.டி.யு. பாஜக – 116 இடங்களை கைப்பற்றும் என டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

என்.டி.டி.வி நடத்திய கருத்து கணிப்பில் 128 இடங்களை கைப்பற்றி ஆர்.ஜே.டி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரிபப்ளிக் டி.வி நடத்திய கருத்துக்கணிப்பில் தேஜஸ்வி யாதவ் கூட்டணிக்கு பெரும்பான்மை என கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 118 முதல் 138 இடங்கள் வரை ஆர்.ஜே.டி – காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் என ரிபப்ளிக் டிவி தெரிவித்துள்ளது. 91 முதல் 117 இடங்களை பாஜக – நிதிஷ் கூட்டணி கைப்பற்றும் என ரிபப்ளிக் கருத்து கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளியான 5 கணிப்புகளில் 4ல் ஆர்.ஜே.டி கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தனித்து போட்டியிட்ட சிராஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 10 இடங்கள் வரை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்து வரும் நிதிஷ் குமாருக்கு எதிர்ப்பு அலை வீசுவது கருத்துக்கணிப்பில் தெரிகிறது. வாக்குப்பதிவுக்கு முந்தைய கணிப்புகளில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறும் என கணித்திருத்த நிலையில் மாற்றம் நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *