வேல் யாத்திரை விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வேல் யாத்திரை விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நீலகிரி, நவ-6

நீலகிரி மாவட்டத்தில் ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

ரூ.189.33 கோடி மதிப்பிலான 67 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசியதாவது:

பாஜகவின் வேல் யாத்திரை விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து 9-ம் தேதி பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்து கேட்ட பின்னர் முடிவு செய்யப்படும். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்படுகின்றன.
மலை மாவட்டங்களில் நில அமைப்பு காரணமாக நோய் பரவல் அதிகரிக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கட்டுபாடுகளுடனே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், சுற்றுலாத் தலங்களை திறக்க வாய்ப்பில்லை. நீலகிரி மாவட்டத்தில் அவசர மருத்துவ தேவைக்காக ஹேய் ஆம்புலேன்ஸ் சேவை தொடங்க முயற்சி எடுக்கப்படும்.
தேயிலைத் தூள் பரிசோதனை ஆய்வகம் நீலகிரியில் திறக்கப்படும். அரசு நடவடிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நோய் பரவல் கட்டுபாட்டில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *