பருவமழை தீவிரம்: முதலமைச்சர் ஆலோசனை

சென்னை.அக்டோபர்.22

வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்க கடலில் புதிதாக உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அரபிக்கடலில் உருவாகி இருக்கும்  காற்றழுத்த தாழ்வுப் பகுதி குறைவு  காரணமாகவும், மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பருவ மழைக்கு  மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை  நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார், டாக்டர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து இருப்பதால் செய்ய வேண்டிய முன் எச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து உள்ளதால் அங்கு செய்ய வேண்டிய முதல் கட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நிவாரணப் பணிகளை விரைந்து செய்வது குறித்து அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் மிகவும் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சாலைகளில் விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இவை தவிர எதிர்பாராமல் மழை வெள்ளத்தில் சிக்கி கொள்பவர்களை மீட்க தயார் நிலையில் படகுகளை வைக்கவும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை ஊர்களில் மீட்பு பணிகளுக்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.

 மேலும் தமிழகம் முழுவதும்  ஏரிகள்-குளங்கள், உள்ளிட்ட நீர்நிலைகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *