தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது.. உதகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
நீலகிரி, நவ-6

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
தொடர்ந்து இன்ட்கோ சர்வ் சார்பில் வாகனங்கள், முன்னாள் படைவீரர் நலத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை, நகராட்சிகள், வனத்துறை, தமிழ்நாடு குடிைச மாற்று வாரியம், ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள், தாட்கோ, தோட்டக்கலைத்துறை, கதர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தொழில்நுட்ப கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.189.35 கோடி மதிப்பில் 67 முடிவுற்ற வளர்ச்சி பணிகளை திறந்துவைத்தார். இதில் குன்னூர் பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம், கேத்தி அருகே பிரகாசபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள், ஊட்டி நகரில் புதுப்பிக்கப்பட்ட அரசு சேட் நினைவு மகப்பேறு மருத்துவமனை ஆகியவை அடங்கும்.
மேலும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சிகள், நகராட்சிகள், பொதுப்பணித்துறை, தாட்கோ, இன்ட்கோ சர்வ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், வனத்துறை, வேளாண் பொறியியல்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, பயனாளிகளுக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெங்கடன், இயற்கை வேளாண்மை செய்ய ஊக்கத்தொகை வழங்குதல், பசுமை வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
நீலகிரி மாவட்ட வளர்ச்சிப் பணி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதகையில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.