கையில் வேலுடன் எல்.முருகன் திருத்தணி புறப்பட்டார்..கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை என பேட்டி..!!

கடவுளை வழிபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, அதை யாராலும் தடுக்க முடியாது. எனவே கடவுள் முருகனை கும்பிடுவதற்காக திருத்தணிக்கு புறப்படுகிறேன் என்று வேலுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருத்தணி புறப்பட்டார்.

சென்னை, நவ-6

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பாஜக சார்பில் வேல் யாத்திரை நடந்த உள்ளதாக பாஜகவால் அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பாஜகவினரின் இந்த வெற்றிவேல் யாத்திரை அனுமதிக்கக்கூடாது, யாத்திரை என்ற பெயரில் கலவரத்தை தூண்ட முயற்சி நடப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பாஜகவினரின் வெற்றிவேல் யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று நேற்று நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் திருத்தணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மலையின்மேல் யாத்திரையைத் தொடங்க உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கூறியதாவது:

கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன். கடவுள் முருகன் துணையோடு வேல் யாத்திரையை தொடங்குவோம்.முருகனுக்கு எதிராக இருப்பவர்களின் முகத்திரையை கிழிக்கவே வேல் யாத்திரை, முருகனை வழிபட நான் விரும்புகிறேன் எனக்கு அரசியல் சாசனப்படி உரிமை உள்ளது. நாட்டில் ஒவ்வொருவருக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளதால் திருத்தணி செல்கிறேன். அரசு தடையை மீறி வேல் யாத்திரை திருத்தணியில் நடைபெறும். கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் திமுகவும், மு.க.ஸ்டாலினும் இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *