தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய, விடிய வெளுத்து வாங்கும் மழை..!!
சென்னை, நவ-6

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னை, மதுரை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் முதலில் தூறலும், அதன்பின்னர் கனமழையும் பெய்தது.
நேற்று இரவு முதல் பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், இதேபோல் மதுரை மாவட்டம் மேலூர் , கோட்டம்பட்டி சுற்றுவட்டாரங்களில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.கும்பகோணம், தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை கொட்டி வருகிறது. இதையடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.