பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க ஒடிசா, ராஜஸ்தான் முதல்வர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்..!

பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி ராஜஸ்தான் மற்றும் ஒடிசா முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, நவ – 5

நாடு முழுவதும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனினும் கொரோனா தொற்று பரவலின் மத்தியில் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனிடையே, மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று மற்றும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டாசு விற்பனையாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பட்டாசு உற்பத்தியில் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என 8 லட்சம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நாட்டில் பட்டாசு பயன்பாட்டில் 90 சதவீதம் உற்பத்தியை தமிழகம் கொண்டுள்ளது. காற்று மாசு, ஒலி மாசு விதிகளின் படி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு பிரச்சினை ஏற்படாது. எனவே, பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *