தனியார் நிறுவன ஊழியர்கள், ஊடக ஊழியர்கள் மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி; தெற்கு ரயில்வே அறிவிப்பு..!
சென்னை புறநகர் சிறப்பு ரயில்களில் அத்தியாவசிய பணியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், ஊடக ஊழியர்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புறநகர் சிறப்பு ரயில்களில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னை, நவ-5

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் அத்தியாவசிய பொருட்களை கையாளும் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றுபவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் சரக்கு மற்றும் போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் குழந்தைகள் நலம், மூத்த குடிமக்கள் நலம், சமூக சேவை செய்யும் அமைப்பின் ஊழியர்கள் மற்றும் அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் ஆகியோரும் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு என அவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் இருந்து அங்கீகார கடிதமும், புகைப்பட அடையாள அட்டையும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் ரயில்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.