டெங்கு தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் இல்லை : ஸ்டாலின்
சென்னை.அக்டோபர்.22
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது…
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அரசு இன்னமும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது. தமிழகம் முழுவதும் 2000 பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவர்கள் கூட இறந்திருப்பது வேதனையாக உள்ளது.எனவே, அரசு முழு கவனத்தையும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் செலுத்த வேண்டும். குட்காவில் காண்பித்த தீவிரத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் இதில் காண்பிக்க வேண்டும். நிலவேம்பு கஷாயம் டெங்குவை குணப்படுத்தும் என்பதால் திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் தொடர்ந்து வழங்க அறிவுறுத்தியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.